Showing posts with label கானா. Show all posts
Showing posts with label கானா. Show all posts

பீட்ஷா, பேர்கர், சிப்ஸ்

ஐக்கிய இராச்சியத் தேர்தல்.

தேர்தல் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தாலும் பலரும் எதிர்பார்த்தபடி தொங்கு பாரளமன்றம் தான் அமைந்துள்ளது. தொழிற்கட்சி தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய லிபரல் கட்சி பழமைவாதிகளுடன் சேர்ந்து 13 வருட தொழிற்கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டார்கள்.

பழமைவாதக் கட்சிக்கும் லிபரலுக்கும் சிலவிடயங்களில் ஒத்துப்போனாலும் பாரளமன்றத்தின் ஆயுள் இருவரும் நடத்தும் குடித்தனத்தில் தான் இருக்கின்றது. பக்கிங்காம் அரண்மனையில் மகாராணியின் அனுமதி பெற்று டேவிட் கமரூன் பிரித்தானியாவின் இளைய வயது பிரதமராக தன்னுடைய மனைவியுடன் செவ்வாய் இரவு இலக்கம் 10 டவுணிங் வீதியிலுள்ள பிரதமர் இல்லத்தில் குடியமர்ந்துவிட்டார்.

இவர்களின் ஆட்சியில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய குடியுரிமையுள்ளவர்களுக்கே தொழில் மற்றும் கல்வி வாய்ப்ப்புகளில் முதலுரிமை மற்றும் பணக்காரர்களுக்கு தான் அதிக சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இவர்களின் முதலாவது பட்ஜெட் வந்தபின்னர் தான் யாருக்கு என்ன கிடைக்கப்போகின்றது யாருக்கு ஆப்பு அடிக்கப்போகின்றார்கள் என்பது தெரியவரும்.


ஜெசியும் சாருவும்

சில நாட்களுக்கு முன்னர் தான் விண்ணைத் தாண்டி வருவாயாவும் பையாவும் பார்க்க கிடைத்தது. இங்கே விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போகின்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள். விதாவ நீண்ட நாட்களின் பின்னர் அழகான ஒரு காதல் கதை. சிம்பு முதல்முறையாக நடித்திருக்கின்றார். எனக்கு பிடிக்காத நடிகை திரிஷா அழகாகவும் அந்தப் பாத்திரத்திற்க்கு பொருத்தமாகவும் இருக்கின்றார். திரிஷாவை மறந்து ஜெசியாகவே மனதில் பதிந்துவிட்டார். காதல் வயப்படுகின்ற அல்லது வயப்படப்போகின்ற இளைஞர்களின் மனதில் பெரும்பாலும் ஜெசி போன்ற தேவதைகள் தான் இருக்கின்றார்கள்.

பையா லிங்குசாமியின் பழையபடங்களின் ஒரு கலவை யுவன் இல்லையென்றால் படம் பப்படமாகியிருக்கும். தமன்னா சாருவுடன் ஒட்டவில்லையென்றே சொல்லவேண்டும்.

இரண்டு படங்களிலும் காதலன்கள் தங்கள் காதலியைக் கண்டதும் காதல் வயப்படுகின்றார்கள். ஜெசி ஒரு புறத்தில் கார்த்திக்கை காதலித்தாலும் குடும்பத்திற்க்காக தன் காதலைத் துறக்கின்றாள் அதே நேரம் சாருவுக்கோ சிவாமேல் கடைசியில் தான் காதல் வருகின்றது.

ஜெசி தேவதை என்றால் சாரு சாதாரண வீதியில் போகின்ற பெண் தான். ஜெசியை கனவிலும் காணலாம் கால நேரம் கிடைத்தால் கையும் பிடிக்கலாம் ஆனால் சாரு வீதியில் பார்ப்பதோடு சரி..

கிரிக்கெட்

ஐசிசியின் இருபதுக்கு இருபது உலகக்கோப்பை இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது. இன்றைய முதல் அரையிறுதியில் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரால் கேலி செய்யப்பட்ட அல்லது குறைத்துமதிப்பிடப்பட்ட இங்கிலாந்து அணி இலங்கையை மண் கவ்வச் செய்துவிட்டது. இந்தியாவுடனான போட்டியில் இலங்கை வீரர்கள் ஆக்கோரசமாக போராடி வென்றதற்கான பலனை இன்று அறுவடை செய்யமுடியவில்லை. முக்கியமான இந்தப்போட்டியிலும் அண்மைக்க்காலமாக சோபிக்காத பாரளமன்ற உறுப்பினர் கெளரவ சனத் ஜெயசூரியாவை ஏன் இணைத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விடயம். பெரும்பாலும் இலங்கை அணித் தெரிவில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை ஆனால் ஜெயசூரியாவை மீண்டும் மீண்டும் சேர்க்கும் போது ஏதோ ஒரு இரகசியம் இருப்பதுபோல் தெரிகின்றது. சாதனை வீரன் சனத் தற்போது பலராலும் காரசாரமாக சிலாகிக்கபடுவது கவலைக்குரியது. எப்படியிருந்த சனத் இப்படியாகிவிட்டார்.

நாளைய போட்டியில் பலமான அவுஸ்திரேலியாவை குருட்டு அதிர்ஷ்டத்தில் அல்லது தென்னாபிரிக்காவும் பலவீனத்தால் தெரிவான பாகிஸ்தானை எதிர்த்து ஆடுகின்றது. இதில் வெற்றி பெறும் அணிதான் இங்கிலாந்தின் இறுதிப்போட்டி ராசியினால் கிண்ணத்தை வெல்லும் சாத்தியம். நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் கோப்பையைத் தக்கவைக்குமா? இல்லை ஆஸியிடமோ இங்கிலாந்திடமோ பறிகொடுக்குமா? ஞாயிற்றுக்கிழமை விடைகிடைக்கும்.

WWW

மேற்கத்திய நாடுகளில் மூன்று Wகளை நம்பக்கூடாது என்பார்கள். அதாவது Weather, Work and Women (சிலர் மூன்றாவது W, Women இல்லை Wife என்கின்றார்கள் ) . முதல் இரண்டு Wகளும் என்னை ரொம்பச் சோதித்துவிட்டன. மூன்று கிழமைக்கு முன்னர் வெப்பநிலை 20டிகிரிக்குச் சென்று சமர் வந்துவிட்டதுபோல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் மீண்டும் குளிர்காலம் வந்துவிட்டதுபோல் சரியான குளிர் மதியம் நல்ல வெயில் என சாதாரண உடுப்புடன் சென்று இரவு வீடு திரும்பும்போது ரொம்ப நொந்துபோய்விட்டேன். மீண்டும் இன்றுமுதல் ஓரளவு நல்ல வெப்பநிலை ஆனாலும் நான் ஜாக்கெட்டுடன் தான் திரிகின்றேன் ஹிஹிஹி.

வேலையப் பொறுத்தவரை இவர்கள் இன்னும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடவில்லையென்பதால் நல்ல வேலை எடுப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கின்றது. அப்படிக் கிடைத்தாலும் சில நாட்கள் தான் வேலை செய்யமுடியும். எந்தவொரு வேலையும் நிரந்தரமில்லை என்பது மேற்கத்தைய நாடுகளில் எழுதப்படாத சட்டமோ தெரியவில்லை. அடுத்த W பற்றி அனுபவமில்லை என்பதால் ஒன்றும் சொல்லமுடியாது.

கானா பிரபா

கானா நான் வியந்துபார்க்கின்ற நண்பன். என்னை வலை எழுத வைத்தவர்களில் முதன்மையானவர். ஆரம்பகாலங்களில் வலைப்பதிவு செய்யப் பல உதவிகள் செய்தவர். இன்றைக்கு ட்விட்டர் ஜீடோல்க் பேஸ்புக் என எங்கள் நட்பு தொடர்ந்தாலும் ஒரு மாம்பழமே எங்கள் நட்பை ஆரம்பித்தது என்றால் மிகையில்லை. இவரை ஒரு சினிமாப் பாடல்களின் களஞ்சியம் என்றே சொல்லலாம். உலாத்தல் என்றாலே பொடியனுக்கு கொண்டாட்டம். என்னுடைய வயதை ஒத்தவர் என்றாலும் நான் செல்லமாக அண்ணை என அழைத்தால் ஓம் என்பார். காலத்துக்கு காலம் இவருக்கு வயது ஏறுதோ இல்லையோ அந்தக் காலத்தில் கலக்கும் நடிகைகளின் தீவிர ரசிகன் இவர் ஸ்ரீதேவியில் தொடங்கி இன்றைக்கு தமன்னாவரை இவரின் கனவுக் கன்னிகள்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பு அண்ணன் இனிய நண்பன் கானாப் பிரபாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இணுவில் முருகன் எல்லா இன்பங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.