ஆறாவடு எம் மண்ணின் கதை

சிலகாலமாக இணையத்திலும் தமிழ் வாசகர்கள் மத்தியிலும் அதிகமாகப் பேசப்பட்ட புத்தகம் ஆறாவடு. நண்பர் சயந்தனின் முதல் நாவல். அண்மையில் லண்டனில் நடந்த ஆறாவடு வெளியீட்டுவிழாவின் போது சயந்தனின் கையால் இந்த நாவலை வாங்கியது மறக்கமுடியாத அனுபவம். வெளியீட்டு விழாவில் வாசிக்கத் தொடங்கி இடையில் இன்னொரு நண்பருடன் நிலக்கீழ் புகையிரத்ததில் பயணித்ததால் மீண்டும் பஸ்ஸில் வாசிப்பைத் தொடர்ந்து வீடு வருமுன்னர் வாசித்துமுடித்துவிட்டேன்.

1987ல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் (ஜெயமோகனின் வரிகளில் சொன்னால் பாலியல் வல்லுறவே தெரியாத அல்லது செய்யாத இராணுவம்) காலத்தில் தொடங்கி 2003ல் ஜீஎல் பீரிஸும் பாலா அண்ணையும் தாய்லாந்து புக்கட் நகரில் மரக்கன்று நடும் வரை அமுதன் என்ற முன்னாள் போராளியின் கதைதான் இந்த ஆறாவடு.

இந்த நாவலானது நீர்கொழும்பில் தொடங்கி எரித்திரியாவில் முடிவடைகின்றது. 21 அத்தியாயங்கள் நீளும் இந்த நாவலில் பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறுகதையாகவும் கருதலாம். இதைப் பலர் பல இடங்களில் விமர்சித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சயந்தன் பல கிளைக்கதைகளை ஒன்றாகச் சேர்த்து எம் வரலாற்றை நாவலாகத் தந்திருக்கின்றார்.

அமுதன் என்ற பெயருடைய ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். 2002 ரணில் விக்கிரமசிங்க காலத்தில் இயக்கத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போக முனையும் இளைஞன். அவனது காதலியின் பெயர் அகிலா. இவரின் உதவியுடன் தான் அமுதன் வெளிநாட்டுக்கு நீர்கொழும்பிலிருந்து களவாக இயந்திரப் படகில் செல்லவிளைகின்றான்.;

அமுதன் என்பது அவனின் இயக்கப்பெயர். இந்த தமிழ்ப் பெயர் பம்பலை எல்லாம் சயந்தன் தனக்கே உரிய நக்கல் பாணியில் எழுதியிருக்கின்றார். சைக்கிள் கடைக்கு ஒட்டகம் எனப் பெயர் மாத்தியது எல்லாம் கதை ஓட்டத்தினூடு வருகின்றது. ஒட்டகம் எனத்தான் ஞாபகம் வருது கோப்பாயிலோ இருபாலையிலோ ஒரு சைக்கிள் கடைக்கு ப்ரியா ஒட்டகம் எனப் பெயிரிட்டுவிட்டு ஒட்டகத்தின் படமும் வரைந்திருந்தார்கள்.

தானும் தன்ரை பாடும் என இருந்த அமுதனை இந்திய இராணுவத்தினர் ஒரு தலையாட்டி தன் சொந்தப் பிரச்சனைக்காக தலையாட்டிவிட கைது செய்கின்றார்கள். பின்னர் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஈபிஆர்எல்எவ் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜப் பெருமாளின்(வரலாறு முக்கியம்) அணியினர் தம்முடன் வலுக்கட்டாயமாகச் சேர்க்கின்றார்கள்.

ஆனாலும் ஏனைய ஈபி தலைவர்களையோ தொண்டர்களையோ போலில்லாமல் அமுதன் அப்பாவியாக இருந்த படியால் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் புலிகளுடன் இணைகின்றான். அங்கே பரந்தாமன் என்ற அவனி இயற்பெயர் அமுதனாக மாறுகின்றது.

நல்ல சண்டைப்போராளியான அமுதன் ஒரு காலத்தில் ஒரு யுத்தத்தில் தன் ஒரு காலை இழக்கின்றான். இதன் பின்னர் அவன் பொய்க்காலுடன் அரசியல் பணிகளில் ஈடுபடுகின்றான். இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் அமுதன் வன்னியில் இருந்து அமுதன் அரசியல் பணிகளுக்காக யாழ்ப்பாணம் செல்கின்றான். அங்கே அகிலா மேல் காதல் கொண்டு பின்னர் அந்தக் காதலுக்காக இயக்கத்தை விட்டு விலகி ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு களவாகச் செல்லமுயல்கின்றான். அமுதன் ஐரோப்பியநாட்டுக்குச் சென்றானா? அவனது கடல்ப் பயண திகில் அனுபவங்கள் என்ன? என்பதை ஆறாவடு நாவலை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

அமுதனின் இந்தக் கதையினூடாக எம் மண்ணில் ஒரு காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை சயந்தன் கண்முன்னே கொண்டுவருகின்றார். சில சம்பவங்களை அழகாக பதிவு செய்த சயந்தன் சில சம்பவங்களை ஏனோ ஒரு வரியில் முடித்துக்கொண்டார் உதாரணமாக யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது பாரிய இடப்பெயர்வு நந்திக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்திய சயந்தன் அந்த அத்தியாய முடிவில் "நந்திக் கொடி ஏத்திய இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருஷாந்தியின் சைக்கிளை இராணுவம் மறிந்தது." என மொட்டையாக முடிக்கின்றார்.

கிருஷாந்தி யார்? அவருக்கு என்ன நடந்தது? என்பது அடுத்த அத்தியாயத்தில் எழுதியிருப்பார் என நினைத்துப் பக்கத்தைப் புரட்டினால் ஏமாற்றம் தான் கிடைத்தது. நிச்சயமாக கிருஷாந்தியின் அவலத்தை சயந்தன் பதிவு செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் அதை ஒரு வரியில் எழுதி இருக்ககூடாது. ஈழப்பிரச்சனை நன்கு தெரிந்தவாசகர்களால் இவற்றை ஊகிக்கமுடியும் ஆனால் பிரச்சனை தெரியாதவர்கள் என்ன விடயம் இது என தலையைப் பிடுங்கவேண்டி இருக்கும்.

இந்திய இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த வெற்றி என்ற போராளியை நான் என் வாழ்க்கையின் கண்டிருக்கின்றேன். அதேபோல இந்திய இராணுவம் இருக்கும் போது பரமசிவன் கழுத்துப் பாம்பாக இருந்த ஈபிஆர்எல்எவ் குழுவினரும் இந்திய இராணுவம் வெளியேறியபின்னர் என்னசெய்வது எனத் தெரியாமல் அமுதன் போல இயக்கத்துடன் இணைந்தவர்களும் அப்பாவி மக்களுக்குத் தொல்லை கொடுத்தது பல புலி உறுப்பினர்களின் மரணத்துக்கு காரணம் என‌ மின்கம்பத்தில் மரணத்தை தழுவியவர்கள். ஓடித்தப்பியவர்கள் எனப் பலரும் இந்தக் கதையில் உலாவும் நிஜமான பாத்திரங்களே.

சயந்தனின் நக்கல் எழுத்து நடை ஏற்கனவே இணைய வாசகர் அறிந்ததே. அதை நடையுடன் இந்த நாவலையும் எழுதியிருப்பதால் பல இடங்களில் வாய்விட்டே சிரித்தேன். பஸ்சில் பக்கத்தில் இருந்த ஜமேக்கன் பெண் அடிக்கடி நான் சிரிப்பதைப் பார்த்து இன்னொரு இருக்கையில் போய் அமர்ந்த கொடுமையும் சயந்தனால் எனக்கு ஏற்பட்டது.

டில்ஷான் தேநீர்ச் சாலைப் சும்மா தேநீர்ச் சாலையாக மாறிய‌ பகிடி உங்கடை எங்கடை நம்பர் பிளேட் பகிடி, இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிய கூத்து எனப் பல இடங்களில் சயந்தன் சிரிக்க வைப்பதுடன் இவை எல்லாம் ஒரு காலத்தில் நடந்தவையே என மீண்டும் நினைக்கவும் வைக்கின்றார்.

அந்தக் காலத்தில் அந்த மரணம் மலிந்த மண்ணில் வாழ்ந்த ஜீவராசிகளில் நானும் ஒருவன் என்பதால் கதையின் ஓட்டத்துடன் மிக இலகுவாக கலப்பதுடன் பல சம்பவங்கள் எங்கள் ஊரில் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்ப்போவதாகவும் உள்ளது. இதுதான் சயந்தனுக்கு கிடைத்த வெற்றி.

பின்குறிப்பு : இது ஒரு விமர்சனம் அல்ல நுனிப்புல் மேய்ச்சலே

நானும் என் மருமக்களும்



கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னர் ஒரு  ஃபோரத்தில் அங்கத்தவராக இருந்தபோது  ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது

வணக்கம் வந்தி அண்ணா
நீங்கள் வடமராட்சியா? நானும் வடமராட்சி தான்.

என ஆரம்பித்த மெயில் நட்பு பின்னர் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தபின்னர், அதே பெண் சில நாட்களின் பின்னர் ,நீங்கள் பீகோனில் தான் ரீயூசன் போனீர்கள்? நீங்கள் படிக்கின்ற காலத்தில் சரியான குழப்படியாம் போன்ற என்னைப் பற்றிய சில தகவல்களையும் சொல்லி என்னை அசத்தினார். எப்படி இதெல்லாம் தெரியும்  எனக் கேட்டபோது என்னுடைய போட்டைவைப் பார்த்த தன் அத்தை முறையான ஒருவர் இவர் மயூரன் தானே என்னுடன் படித்தவர் என்றதுடன் என்னைப் பற்றிய சில குறிப்புகளையும் சொல்லியிருக்கின்றார். அதுவரை பச்சிளம் பாலகனாக உலாவிய என்னை மாமா என உறவு முறை சொல்லி அழைத்தவர் அந்தப் பெண் தான். (ஏன் மாமா எனக் கூப்பிட்டார், என்ற கேள்வி எல்லாம் கேட்ககூடாது, கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன்).


அதன் பின்னர் முதலாவது பதிவர் சந்திப்பு அமைப்பு குழுவில் இருந்த புல்லட், லோஷன், ஆதிரை, சுபானு, மது, பால்குடி ஆகியோரை விட தான் வயதில் இளையவன் என்பதாலும் இந்த குழுவிலையே நான் பெரியவன் என்பதால் என்னை அண்ணா என அழைக்காமல் மாமா என அழைக்கத் தொடங்கினான்.

இப்படி சதீஸ் தொடங்கிய மாமா இப்போ வலையுலக நண்பர்களால் அன்பாக மாம்ஸ் என அழைக்கப்படும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டது. இதிலை கொடுமை என்னவென்றால் லோஷன் போன்ற வயதுபோனவர்களும் என்னை மாமா என அழைப்பதுதான்.

உலகிலையே தாய்க்கு அடுத்த உன்னதமான உறவு மாமா தான். அதனால் தானோ என்னவோ என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது எனக்கு அந்த உறவு முறை பிடித்துக்கொண்டுவிட்டது.

இவர்கள் சில வேளை பொது இடங்களில் அதுவும் அழகான பெண்களுக்கு முன்னாள் என்னை மாமா என அழைத்து, என்னைத் திரும்பிப் பார்க்க முயன்ற பெண்களை திரும்பிப்பாராமலே செய்துவிட்டார்கள். இதுதான் இவர்களுக்கு மாமாவாக இருப்பதால் நான் படும் ஒரே ஒரு கஸ்டம்.

ஒரு முறை டொக்டர் முருகானந்த‌ன் தன்னை ஒரு சிறுவன் தாத்தா என அழைத்ததாகவும் அதனால் தனக்கு வயதாகிவிட்டது என கவலை அடைந்ததாகவும் தன் பேஸ்புக்கில் இட்டிருந்தார். அதேபோல தான் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களை சில சிறுவர்கள் அங்கிள் என அழைக்கும் போது முகம் கொஞ்சம் வாட்டமடையும். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றுவிட்ட விடவேண்டியதுதான்.

அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் 2012 ஆண்டு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க வாழ்த்துக்கின்றேன்.

2011 சில நிகழ்வுகள் நினைவுகள்



அரசியல்


இலங்கை

இந்த ஆண்டில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை பாரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. யாழ்ப்பாண மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு விழுந்த அடியும் கிரிஸ் மேனும் தான் ஹைலைட்டான விடயங்கள். அதை விட ரணில் விக்ரமசிங்காவுக்கு உள்கட்சிக் குடைச்சல்கள் இன்னும் சுவாரசியமான விடயம். சங்கிலியன் சிலை விவகாரமும் கொஞ்சம் சூடுபிடிச்சு பின்னர் அப்படியே ஆறிவிட்டது.

இந்தியா

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைந்து மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தாமல் 5 ஆண்டுக்கு ஒரு முறை திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் தேர்தல் செலவு மிச்சமாகும். கனிமொழி கைது, கலைஞர் டிவி சிக்கல், அன்னா ஹசாரே, முல்லைப் பெரியாறு, தண்ணிப் பிரச்சனை என பல சிக்கல்கள் இன்னமும் நீடிக்கின்றது. இவ்வளவையும் சாமாளிக்கும் திறமைக்காக மன்மோகன் சிங்குக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

பிரிட்டன்

வில்லியம் கேட் மிடல்டென் திருமணம் இந்த வருட ஏப்ரலில் நடந்தது. என்னதான் மக்கள் அரச குடும்பத்தின் மேல் வெறுப்பாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாக ரோயல் வெடிங் நிகழ்ந்தது. வில்லியத்தின் மனைவி இளவரசி கேட்டை விட அவரின் தங்கை பிப்பா மிடெல்டன் தான் இப்போ பிரிட்டன் பத்திரிகைகளின் ஹாட் கேர்ல்.

ஆகஸ்ட் 6 ந்திகதி நடந்த இங்கிலாந்து கலவரங்கள். டொட்டனத்தில் மார்க் டக்கன் என்ற கறுப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் பொலீசாருக்கு எதிராக நடத்திய வன்முறை லண்டனில் தொடங்கு மஞ்செஸ்டர், லிபர்பூல், பேர்மிங்ஹாம், நொட்டிங்காம் என இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் பரவி பல்லாயிரம் பவுண்ட்ஸ் பெறுமாதியான பொருட்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.


உலகம்

ஜனவரின் தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகியது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முகாபேயின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு இந்த எழுச்சிகள் பரவி கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையும் காடபியின் மரணமும் இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகும்.

மே முதலாம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவிப்புச் செய்தார்.

நோர்வே ஒஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடும் இந்த ஆண்டில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வாகும்.

ஒக்டோபர் 1ல் உலக சனத்தொகை ஏழு பில்லியனாக உயர்ந்தது.

ஜ‌ப்பான் புக்கோஷிமா நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தமையும் அப்பிளின் சக ஸ்தாபகர் ஸ்ரிவ் ஜாப்ஸ் மற்றும் சி மொழியின் தந்தை டெனிஸ் ரிச்சி ஆகிய இருவரின் இறப்பு தொழில்நுட்ப சமூகத்தை உலுப்பிய மரணங்களாகும்.

விளையாட்டு

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டோணி தலைமையிலான அணி மீண்டும் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. எதிர்த்து விளையாடிய இலங்கை அணி மீண்டும் ரன்னர்ஸ் ஆகவே வந்தது, உலகக்கோப்பை வென்ற்
கையுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணியினருக்கு இங்கிலாந்து மரண அடிகொடுத்ததும் அதே இங்கிலாந்தை இந்திய ஆடுகளங்களில் வைத்து இந்தியா பழிக்கு பழி வாங்கியதும் விறுவிறுப்பான கிரிக்கெட் நிகழ்வுகள் ஆகும்.


தனது நூறாவது சதத்தை இன்றைக்கு அடிப்பார் நாளைக்கு அடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் இந்தப் பதிவு பிரசுரமாகும் வரை(மெல்பேர்ன் டெஸ்ட் முடிய‌ இன்னும் 2 நாட்கள் இருக்கின்றது)அடிக்கவில்லை. 

சச்சினின் ஒருநாள் உலகசாதனையான 200 ஓட்டங்களை அவரின் சகாவான சேவாக்கினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முறியடிக்கப்பட்டது. 

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஜோன் டெரி அன்டன் பேர்டினென்ட்க்கு எதிராக தெரிவித்த இனவாத கருத்துக்கள், இங்கிலாந்து நட்சத்திர வீரர் வெயன் ரூனியின் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளால் கால்பந்தாட்ட உலகம் சூடுபிடித்தது.


சினிமா

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாறன் சகோதரர்களின் மொனோபோலியில் இருந்து ஓரளவு தப்பியதால் சில படங்கள் உண்மையாகவே ஹிட் ஆகின. தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை சென்ற ஆண்டுப்படங்கள் அள்ளிக்கொடுத்ததை இந்த வருடம் அறிவித்தார்கள். கொலைவெறிப்பாடல் பட்டி தொட்டி என உலகமெல்லாம் பரவியது இந்த ஆண்டிலைதான்.

உலக அழகி ஐஸ்வர்யாயின் பிரசவமும் இந்த ஆண்டின் பரபரப்பான விடயம் நவம்பர் மாத அழகிக்கு இன்னொரு நவம்பர் மாத அழகி. நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான். 

புத்தகம்

இந்த ஆண்டில் பெரும்பாலும் வலை வாசிப்பே வாசித்ததால் பெரிதாக புத்தகம் எதுவும் வாசிக்கவில்லை. இலங்கை சென்றிருந்தபோது கானாப் பிரபாவின் கம்போடியாவும், அகிலனின் மரணத்தின் வாசனையும் வாங்கி விமானத்தில் வாசித்தேன். கம்போடியாவில் கானா கவர்ந்தார், மரணத்தின் வாசனையில் அகிலன் நடு வானில் கலங்கவைத்தார். இரண்டு புத்தகம் பற்றிய விமர்சனமும் எழுதவேண்டும் (எப்போ? இன்னும் ஆறுமாதத்தில் தானே என நீங்கள் கேட்பது புரிகின்றது)

நான் 

2011 ல் என் வாழ்க்கையில் ஒரு மாதம் மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒக்டோபர் 23ல் தொடங்கி நவம்பர் 22 வரை சொந்த மண்ணில் நண்பர்களுடன் உறவினர்களுடன் கழித்த நாட்கள் என்றும் இனிமையானவை. இந்த குறுகிய காலத்தில் வடக்கே யாழ்ப்பாணம் கிழக்கே மட்டக்களப்பு தெற்கே கதிர்காமம் என மேற்கில் கொழும்பிலிருந்த நான் திக் விஜயம் செய்து மகிழ்ந்தேன். மத்திய மலைநாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை.



என் தெரிவில் சில சிறந்த 2011 விருதுகள்
வலைத்தளம்
சாதாரணவனின் மனது என விசரன் எழுதும் வலை. இவரின் சில கதைகள் அட என ஆச்சரியமூட்டுபவை. புலம் பெயர் தேசத்து விடயங்களை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக எழுதுகின்றார். 

ட்விட்டர் 
சண்முகன் (இலங்கை) 
முழு நேர ட்விட்டராக மாறி பலரின் ட்விட்டகளை ரீட்விட்டுவதிலும் தன்னுடைய சில ட்விட்டுகளிலும் கவர்ந்தவர். http://twitter.com/#!/shanmugan10
ராஜன் லீக்ஸ் (இந்தியா) 
இவரின் சில ட்விட்டுக்கள் ஆச்சரியமாக இருக்கும்.
http://twitter.com/#!/RajanLeaks

வலைப்பதிவர்
மருதமூரான் (இலங்கை)
http://maruthamuraan.blogspot.com/
நடுநிலையான கருத்துக்களுடன் பலதும் எழுதுகின்றார், மொக்கை மட்டும் இன்னும் கைகூடவில்லை, அதே நேரம் இவர் பேஸ்புக்கில் இடும் காதல் வசனங்களுக்கு நான் ரசிகன்


ஜாக்கி சேகர் (இந்தியா)  http://www.jackiesekar.com/
இவரின் திரைப்பட விமர்சனங்களும் வெள்ளந்தித்தனமான சில பதிவுகளும் என்னை மிகவும் கவர்ந்தது.


படம்  : எங்கேயும் எப்போதும்


பாடல் : என்னமோ ஏதோ : படம் கோ


சிறந்த நடிகர் : அஜித் (மங்காத்தா)


சிறந்த நடிகை : அஞ்சலி ( எங்கேயும் எப்போதும்)


சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)


சிறந்த இயக்குனர் : சரவணன் (எங்கேயும் எப்போதும்)


சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி  ( கோ, நண்பன்)


தொகுப்பாளர்  : சிவகார்த்திகேயன் (இவரின் அது இது எது பார்க்காமல் விடுவதில்லை)


சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்

வடிவேல்

சும்மா இருக்காமல் அழகிரியின் சொல்லைக் கேட்டு விஜயகாந்தை எதிர்க்கின்றேன் என தேர்தல் மேடைகளில் மொக்கைப்போட்டு இப்போ வீட்டில் அடைந்து கிடைக்கின்றார். பாவம் கைப்புள்ளை கருணாநிதியின் நிதியை மட்டும் நம்பி மோசம் போய்விட்டார்.



அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2012 உங்கள் வாழ்வில் வசந்தங்களையும் சந்தோஷங்களையும் கொண்டுவர வாழ்த்துக்கின்றேன்.