சித்திரைப் புத்தாண்டு - இன்னொரு சாதாரண நாள்

நேற்று சித்திரைப்புத்தாண்டு 13ந்திகதி வாக்கிய பஞ்சாங்கப்படி 11மணி 7 நிமிடத்திற்க்குப் பிறந்தது அந்த நேரம் முதலே எஸ் எம் எஸ்சில் வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன பெரும்பாலான வாழ்த்துக்களில் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக பிரார்த்திக்கவும் என்ற வாசகவே அதிகமாக காணப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இருந்து வந்த குறும்செய்திகள் ஒரு இணையத்தளத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

திருக்கணித பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்கும் அன்பர்கள் நள்ளிரவு 12 மணி 47 நிமிடத்தில் இருந்து தங்கள் செய்திகளை(வாழ்த்துக்கள் என்பதை விட செய்தி என்பதே பொருத்தமான சொல் காரணம் வாழ்த்தைவிட ஒரு இனத்தின் அவலத்தைத் தான் பெரும்பாலான செய்திகள் தாங்கிவந்தன) அனுப்பினார்கள். ஒரு சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் செய்திகள் அனுப்பியபின்னர் போன் பண்ணி தாங்கள் அனுப்பிய செய்தி கிடைத்ததா என விசாரித்தார்கள்.

காலையில் தொலைக்காட்சியை திறந்தால் சன்னில் மஹதி பாடிக்கொண்டிருந்தார், கலைஞரில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பும் திருமாவளவனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்னொரு சானலில் யாரோ ஒருவர் பாடினார், இசையருவியில் ராஜாவின் ராஜகீதங்களை ஒருவர் சாக்ஸ்சபோனில் உருகிஉருகி வாசித்தார். காலையில் பாடியவர்கள் அனைவரும் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார்கள் என்பது சிறப்பாக இருந்தது.

கோவிலுக்கு கட்டாயம் போகவேண்டும் என்ற அம்மாவின் கட்டளையைத் தட்டாமல் கப்பித்தாவத்தை கயிலைநாதரைத் தரிசிக்க சென்றேன். பெரிதாக கூட்டம் இல்லை. வீதிகளில் கூட முன்னைய கலகலப்பு இல்லை. மக்கள் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை.

சன்னில் இடம்பெற்ற ரகுமானின் பேட்டி, விஜய் டீவியில் அனுவுடன் காபி குடித்த தயாநிதி மாறனின் பேட்டி என்பன இதனால் தவறிவிட்டது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் அடிக்கடி மறுஒளிபரப்புவார்கள் அதனால் மீண்டும் பார்க்க சந்தப்பம் கிடைக்கும்.

விஜய் டிவியில் மாத்தியோசி என்ற நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர்களும் அடுத்த பிரபுதேவாக்களும் ஆடிப்பாடினார்கள், அதிலும் ரவி வெட்கப்படாமல் ஜெயலக்ஸ்மியுடன் ஆடினார். சாய்பல்லவி அழகாகப்பாடினார். எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியதுபோல் பிரேம்கோபால் ஆடியபாடலும் பின்னர் அந்தப்பாடலுக்கு அவர்கொடுத்த விளக்கமும் அருமையாக இருந்தது. அனைவரும் எழுந்து பிரேம்கோபாலுக்கு மரியாதை செய்தார்கள்.

அடுத்து நீயா, நானா புகழ் கோபிநாத்தின் நெறியாள்கையில் பேராசிரியர் பெரியார் தாசனின் தலைமையில் சின்னத்திரைத் தொகுப்பாளர்கள் நடிக நடிகைகள் பங்குபற்றிய ஆய்த எழுத்து என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. சிறிது நேரமே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

பின்னர் நடிகர் சிவகுமாரின் கம்பன் என் காதலன் என்ற நீண்ட( இரண்டரை மணி நேரம்) இராமாயணச் சொற்பொழிவு நிகழ்ந்தது. மனிதர் என்ன அருமையாக பாடல்களைச் சொல்லி விளங்கப்படுத்தினார். கிட்டத்தட்ட 3000 பேர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள் பெரும்பான்மையானவர்கள் கல்லூரி மாணாவிகள், சில பிரபல கம்பன கழகத் தலைகளும் முன்னால் இருந்தார்கள் குப்புசாமி முதலியார், வழக்கறிஞர் முருகேசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

100 பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு இராமாயணத்தை மிகவும் சுவையாக நின்ற நிலையில் சொற்பொழிவாற்றினார். இராவணனைப் பற்றி விளக்கியபோது மாணவிகளிடம் பழத்த கரகோஷம். சீதையைக் கடத்தியதைத் தவிர வேறு எந்தக் கெட்டபழக்கமும் அவரிடம் இல்லை. சூர்ப்பனகை பற்றிய பாடல் விளக்கத்திற்க்கும் கரகோஷம் அதிகம்.

பாமரர்களுக்கும் புரியும் படி இவர் உரையாற்றியதுதான் சிறப்பாக இருந்தது. சிலவேளைகளில் கம்பன் விழா மேடைகளில் இவரைக் இனிக் காணமுடியும்.

இரவு சன்னில் அயன் சிறப்புக் கண்ணோட்டம் நடந்தது. தமன்னா கொஞ்சும் தமிழில் பேசினார். சூரியா, கே.வி.ஆனந்தை விட நண்டு ஜெகனே அதிகம் பேசினார். சன் பிக்சர்ஸ் பற்றி அதிகம் அலட்டிக்காமல் அனைவரும் ஏவிஎம்முக்கே நன்றி கூறினார்கள்.

யுவனின் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் வாமனன் படங்களின் இசைபற்றியும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார்கள். குங்கப்பூவும் பாடல்கள் கேட்கும் ரகம் வாமனனில் சில பாடல்கள் கேட்கும் ரகம். ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது யுவன் இளவரசனிலிருந்து ராஜாவாக முன்னேறிக்கொண்டிருக்கின்றார்.

நேத்ரா தொலைக்காட்சியில் உலகத் தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக சிலம்பாட்டம் ஒளிபரப்பினார்கள். (இவர்களுக்கு மட்டும் எப்படி இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் ஒளிபரப்பக் கிடைத்தது என்பது கேள்விக்குறி). சொந்தச் செலவில் சூணியம் வைக்கவில்லை.

மொத்ததில் நேற்றைய நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் சென்ற மற்றுமொரு சாதாரண நாளே.

விரோதி

இன்னும் சிறிது நேரத்தில் விரோதி என்னும் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. பெயரே பயங்கரமாக இருக்கின்றது. இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் அகில உலகமே ஈழத்தமிழர்களின் அவல‌த்தை வெளியுலகிற்க்கு கொண்டுவந்துள்ளது.

சகல இடங்களிலும் ஏதோ ஒருவகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் வடக்கு கிழக்கில் கொடிய யுத்தத்தாலும், ஏனைய இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் தமிழர்கள் கஸ்டப்படுகின்றார்கள்.

புலம்பெயர் நாடுகளில் கொட்டும் மழையில் மத்தியிலும் உறவுகளுக்காக குரல் கொடுக்கின்றார்கள்.

ஆகவே இப்படியான ஒரு சூழ்நிலையில் புதுவருட வாழ்த்துக்கள் என்பது வேண்டப்படாத ஒரு விடயம்.

க‌டந்த பல வருடங்களாக சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி நின்றோம் ஆனால் இதுவரை அவை இரண்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனாலும் மனம் தளராமல் இம்முறையும் வேண்டி நிற்போம், நம்பிக்கைதான் வாழ்க்கை.

பின் குறிப்பு : இது எண்ணிக்கையில் எனது நூறாவது பதிவு.

ஏவிஎம்மின் அயன் - அட்டகாசம்.

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு வேகமான திரைக்கதையுடைய படத்தைப் பார்த்து, சென்னை ஏர்போர்ட்டில் ஆரம்பிக்கின்ற படம் கொங்கோ, மலேசியா, சென்னை என பல இடங்கள் பறந்து அதே ஏர்போர்ட்டில் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

சூர்யா :

மிகவும் சாதாரணமாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து சாமார்த்தியமாக கடத்தல் செய்யும் இளைஞனாக படம் முழுவதும் வியாபித்திருக்கின்றார். கொங்கோ சண்டைக்காட்சியிலும், மலேசியா கார் ஷேசிங் காட்சியிலும் ஆக்சன் ஹீரோவாக மாறி, தமன்னாவுடன் காதல்காட்சிகளில் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ரிகாரணமாக சர்வசாதாரணமாக காதல் வயப்படுகின்றார். பாடல்களில் பழைய காக்க காக்க அன்புச்செல்வன் போல் மிடுக்காகவும் அழகாகவும் இருக்கின்றார்.

தியேட்டரில் ஏன் இத்தனை பெண்கள் கூட்டம் என்பது சூரியாவின் சட்டை இல்லாத உடும்பைப் பார்த்த்போதுதான் புரிந்தது. பெரும்பாலும் முதல் வாரத்துதில் தியேட்டரில் இளைஞிகள் கூட்டம் இருக்காது ஆனால் இரண்டாவது நாளான இன்றே சூரியாவைப் பார்க்க ரொம்பக்கூட்டம். அடுத்தகாட்சி வரிசையில் முதல் பத்துபேர் அக்மார் பாடசாலை மாணவிகள்.

ஜோதிகா உங்கள் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்.

கே.வி.ஆனந்த் :
கனாக் கண்டேன் வியாபார ரீதியில் போகாவிட்டாலும் வித்தியாசமான கதையால் முதல் படத்திலையே திரும்பிப்பார்க்க வைத்த பிரபல ஒளிப்பதிவாளர். இந்தப் படத்திலும் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவிடம் கொடுத்துவிட்டு கதை,திரைக்கதை,வசனத்தை சுபாவுடன் பங்குபோட்டதுடன் மிரட்டலாகவும் இயக்கியிருக்கின்றார். அதிலும் எப்படிக் கடத்துகின்றார்கள் என்பதை பிளாஷ்பேக்கில் சொல்வதும் வித்தியாசமாக இருந்தது.

நண்டு ஜெகனும் சூரியாவும் ஒரு வீட்டில் நுழைந்து செய்யும் அலப்பறைகளும் பின்னஎ அதேபோல் காட்சிகள் தமன்னா வீட்டில் நடப்பதும் தியேட்டரையே கலகலக்க வைத்தது. கேவி ஆனந்தின் அடுத்த படம் என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கின்றேன்.

எம் எஸ் பிரபு:
இன்னொரு ஒளிப்பதிவாளரின் படத்தில் தன் திறமைகள் அனைத்தையும் காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். குறிப்பாக கொங்கோ காட்சிகளில் திரையில் ஒரு மெல்லிய கறுப்பால் ஆபிரிக்கா கண்டத்தின் கலரை கண்முன்னர் கொண்டுவருகின்றார். அத்துடன் கொங்கோ மலைகளை அதளபாதாளம் வரை கமேரா சுட்டுத் தள்ளியிருக்கின்றது. மலேசியா கார் ஷேசிங்காகட்டும் கொங்கோ சண்டையாகட்டும் பறந்து பறந்து படமாக்கியிருக்கின்றார்.

பாடல் காட்சிகள் அழகாகவந்திருக்கின்றன. குறிப்பாக பாலைவனத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் கொள்ளை அழகு. விழிமூடி ஜோசிக்கின்றேன் பாடல் ஒவ்வொரு காட்சியும் ஹக்கூ கவிதை.

சுபா :
வசனத்தில் தங்கள் எழுத்தை காட்டிய சுபா இரட்டையர்கள் கதையிலும் குறிப்பாக கடத்தல் காட்சிகளில் தங்கள் கதை எழுதிய வாசித்த அனுபவங்களை எடுத்துவிட்டிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. சில டெக்னிக்கள் ஏற்கனவே அறியப்பட்டாலும் மினரல் வாட்டர் போத்தலில் வைரம் கடத்தியது விசிலடிக்க வைத்த காட்சி.

எடிட்டர் ஆண்டனி :
படத்தை தூக்கி நிறுத்திய ஒருவரில் இவரும் ஒருவர். தேவையான இடங்களில் கத்தரியை நன்கு பயன்படுத்தியிருக்கின்றார். போரடிக்கின்றது போல் ஒரு காட்சியும் இல்லை. திரைப்படத்தின் வேகத்திற்க்கு இவரே முக்கிய காரணம்.

ஹாரீஸ் ஜெயராஜ் :
காக்க காக்க, கஜனி, வாரணம் ஆயிரம் என சூரியாவுடன் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துவிட்டு இப்போ நான்காவதாக அயனையும் ஹிட் பண்ணியுள்ளார். விழிமூடி ஜோசிகின்றேன் ,நெஞ்சே நெஞ்சே சன் மியூசிக்கில் இனி தினமும் ஒளிபரப்பாகும். ஹானி ஹானி பாடல் வரிகளே விளங்கவில்லை. பின்னணி இசை சுமார் தான். இன்னும் கொஞ்சம் மினைக்கெட்டிருக்கலாம்.

சண்டைப் பயிற்சி :
கொங்கோவில் நடக்கும் முதல் சண்டைக்காட்சிகள் ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தின. கட்டடங்களுக்கு கட்டடம் சூரியா தாவிகிறதும் பின்னர் அடியாட்களை அடித்துத்வைப்பது அட்டகாசம். நல்லவேளை கட்டடங்களுக்கு இடையில் பெரிதாக இடைவெளி இல்லை இல்லையென்றால் சூரியாவும் இன்னொரு விஜயாக புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயற்பட்டிருப்பார். அதிலும் கூரையில் நடக்கும் சண்டை கண்ணுக்கு குளிரிச்சியாக இருக்கின்றது.

நண்டு ஜெகன் :
சூரியாவுக்கு அடுத்ததாக இந்தப்படத்தில் பேசப்படுவார். கனாக் கண்டேனில் விவேக்கைவைத்து காமெடி என்றபெயரில் மொக்கைபோட்ட கேவிஆனந்த் இந்தமுறை நண்டு ஜெகனை காமெடி மற்றும் துணைப் பாத்திரத்தில் உலாவவிட்டது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதுவரவு. சந்தானத்திற்க்கு போட்டியாளாராக வரும் வாய்ப்பு உள்ளது. தங்கையை சூரியாவுடன் காதல் பண்ண வைக்கும் இடங்கள் மட்டும் கொஞ்சம் லாஜிக் மீறுகின்றது. அண்ணனாக இல்லாமல் மாமாவாக அந்தக் காட்சிகளில் தெரிகின்றார், தவிர்த்திருக்கலாம். இவரின் டைமிங் காமடிகள் கலகல. குறிப்பாக "தமன்னாவை நீ பார்க்கத் தான் சினேகா செய்வது எல்லாம் நமீதா" என்ற இடத்தில் விசில் மழை.

இளைய திலகம் பிரபு :
கல்யாண் ஜூவலேர்ஸ் கெட்டப்பில் இல்லாமல் நான்கு நாள் வெள்ளைத் தாடி சேர்ட் என படத்தை நிறைத்து நிறைவாகவும் செய்திருக்கின்றார். நீண்ட நாட்களின் பின்னர் பெயர் சொல்லும் கதாபாத்திரம். சூர்யாவின் குரு வழிகாட்டியாக கடத்தல் செய்பவர். குளோசப் காட்சிகளில் திரையை நிறைக்கின்றார். இனிமேல் இவர் கதாநாயகனாக நடிப்பது கஸ்டம் தான் காரணம் டூயட் எல்லாம் ஆட முடியாது. இவரின் முடிவுதான் வழக்கமான தமிழ்சினிமாபோல் அமைந்தது கவலை.

தமன்னா :
கல்லூரியில் அறிமுகமானவர் கதாநாயகியாக வந்துபோகாமல் சில இடங்களில் குறிப்பாக காதல்காட்சிகளில் ஜோதிகாவைப் பொறாமைப்பட வைத்து நடித்தும் உள்ளார். அசின் அல்லது நயந்தாரா செய்திருந்தால் இன்னும் நல்லாயிருக்கும். அவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று இவரிடம் மிஸ்போல் எனக்குத் தெரிகின்றது. விக்னேஸ்வரன் ஆதவன் போன்ற தமன்னா ரசிகர்கள் மன்னிப்பார்களாக.

வில்லன் :
வட இந்திய முகச் சாயல் என்பதால் இவரைத் தெரிவுசெய்திருந்தாலும் தன் பங்கை ஓரளவு சிறப்பாக செய்திருக்கின்றார். கோலங்கள் ஆதியின் குரல் நல்லாக செட் ஆகியிருக்கின்றது. சாயலில் பைவ் ஸ்டார் கிருஷ்ணா போல் இருக்கின்றார். இவருக்குப் பதிலாக டானியல் பாலாஜியை நடிக்க வைத்திருக்கலாம்.

பொன்வண்ணன், ரேணுகா(சூரியாவின் தாய்), போன்றொரும் தங்கள் பங்கை திறம்படவே செய்திருக்கின்றார்கள்.

சில கேள்விகள்:
1 . அயன் என்ற பெயர் எதற்காக? காரணம் அயன் என்றால் பிரம்மா என வடமொழியில் அர்த்தம். அயன் தமிழ்ப் பெயரும் அல்ல என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் அயன் என்றால் படத்திற்க்குப் பொருத்தமாக இருக்கும்.
2. கடத்தல் செய்யும் முறைகளை அக்குவேறு ஆணிவேறாகக் காட்டுகின்றார்கள் இது ஏனையவர்களை கடத்தல் செய்யத் தூண்டாதா?
3. ஒரு குற்றவாளி எப்படி பின்னர் அரச உத்தியோகத்தில் சேரலாம்?

இப்படிச் சில கேள்விகளை சும்மாவிட்டுவிட்டு பார்த்தால் அயன் அட்டகாசம் தான்.

டிஸ்கி : சன் பிக்சர்சின் தயாரிப்பு என சன் குழுமத்தின் சகல சானல்களிலும் காட்டுகின்றார்கள் ஆனால் நான் பார்த்த தியேட்டரில் ஏவிஎம்மின் அயன் தான். ஒரு வரிகூட சன் பிக்சர்ஸ் பெயர் வரவில்லை. என்ன காரணமோ?