மரணம் அனைவரும் எம் வாழ்க்கையில் சந்திக்கபோகும் சுவாரசியமான விடயம்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது எங்கள்(ஈழத்தமிழர்) வாழ்க்கையில் சகஜமான விடயம்.
கடந்தவாரம் என்னுடைய ஆச்சி திருமதி.மீனாட்சியம்மா செல்வத்துரை( பாட்டி,அப்பாவின் அம்மா) தன்னுடைய 96ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அந்த நாட்களில் பெண்களுக்கு கல்வி என்பது தேவையற்றது என கருதப்பட்டபோது தன்னுடைய விடாமுயற்சியால் ஒரு ஆசிரியையாக பணியாற்றியது மட்டுமல்ல தன்னுடைய கணவருடன் சமூக சீர்திருத்த விடயங்களில் அவருக்கு உதவியதுடன் அந்தநாள் தமிழரசுக் கட்சி மேடைகளிலும் பெண்கள் பிரதிநிதியாக உரையாற்றியதாக அடிக்கடி சொல்வார்.
எனது வாசிப்புப் பழக்கம் அவரிடம் இருந்தே எனக்கு தொற்றியது என என் உறவினர்கள் சொல்வார்கள். ஏனென்றால் பாண் சுற்றிவரும் சிறியதுண்டுப்பேப்பரில் கூட என்ன எழுதி இருக்கு என வாசித்துப்பார்க்கும் பழக்கம் ஆச்சிக்குண்டு. இணையத்தில் பத்திரிகைகள் வந்தபின்னரும் ஆச்சி வாசிப்பதற்காகவே நாம் பத்திரிகை வாங்கியதுண்டு. சிலவேளைகளில் பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளைக்கூட அவர் வாசித்துவிட்டு எமக்கு புதினமாகச் சொல்வார்.
இதேபோல் தான் அவரின் புத்தகவாசிப்பும் இருந்தது. பெரும்பாலும் ஆன்மீகப் புத்தகங்களையும் ஏனைய சஞ்சிகைகளான மல்லிகை, ஞானம், விகடன் குமுதம் வாசிப்பார். வாசிப்பதற்க்கு எதுவும் இல்லாத போது சிலவேளைகளில் தமிழ்க் கொம்யூட்டர் கூட வாசித்திருக்கின்றார். கடந்த சில வருடங்களாக மட்டும் அவர் பகலில் நித்திரைகொள்வதைப் பழக்கிக்கொண்டார்.
அவரது நீண்ட ஆயுளுக்கு அவரின் நேரம் தவறாத உணவுப் பழக்கம் முக்கியகாரணம் என நான் நினைக்கின்றேன். அத்துடன் தாவரபோஷணியாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். காலைச் சாப்பாடு காலை 9 மணிக்கும் மத்தியானச் சாப்பாடு மதியம் 2 மணிக்கும் இரவுச் சாப்பாட்ட்டை 8 மணிக்கும் ஆச்சி சாப்பிடுவார். மூன்று நேரச் சாப்பாட்டுக்குமுன்னர் அவன் சில நிமிடங்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர். சரியாக 9 மணிக்கு நித்திரைக்குப் போய்விடுவார். இதுதான் அவரின் தினசரிக் கொழும்பு வாழ்க்கையாக இருந்தது. யாழில் இருந்தபோது உறவினர்வீடுகள் கோவில்கள் என ஆச்சியின் பகல்பொழுது பயன்பட்டது.
அவரின் விருப்பம் போலவே அவர் தன்னுடைய சொந்தமண்ணில் தன் வாழ்க்கையைமுடித்துக்கொண்டார். இன்னும் 4 வருடங்கள் வாழ்ந்திருந்தால் ஆச்சியும் சதமடித்திருக்கலாம், என்ன செய்வது அவரின் விதி அவ்வளவுதான் என நினைக்கவேண்டியதுதான். அத்துடன் சிலவேளைகளில் தனது பேர்த்தி ஒருவர் 104 வயதுவரை வாழ்ந்ததுபோல் தானும் வாழக்கூடும் என இடைக்கிடை சொல்வார்.
இந்த வாரத்தில் என் நண்பனுடைய தந்தை ஒருவரும் இங்கே காலமாகினார். அவரின் ஈமக்கிரிகைகளில் கலந்துகொள்ள இங்கேயுள்ள மயானத்திற்க்குச் சென்றிருந்தேன். லண்டனில் மயானம் கூட பூங்காபோல் அழகாக உள்ளது. சீனன், வெள்ளைக்காரன்,கறுப்பன், இத்தாலிக்காரன், இந்தியன், ஈழத்தவன் என்ற பாகுபாடுகளின்றி அனைவரின் கல்லறைகளும் ஒரே தோட்டத்தில் சமரசம் உலாவும் இடம் இது என சொல்லாமல் சொல்லியது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்திருந்தால் வடகொரியாக்காரனும், தென்கொரியாக்காரனும் பக்கத்து பக்கத்து கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருக்கலாம். 1900ல் பிறந்து 1997களில் இறந்தவரின் கல்லறையும் பிறந்து சில மணித் துளிகள் மட்டும் இந்த பாவப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில் இருக்க விருப்பமில்லாத குழந்தையின் கல்லறைகூட பார்வைக்குப்பட்டது.
அவற்றைப் பார்த்தபின்னர் தான் ஏற்கனவே நான் எழுதிய மரணம் சம்பந்தப்பட்ட பதிவையும் ஆச்சிக்கு என் அஞ்சலியையும் எழுதமுடிவு செய்தேன். இனிப் பழைய பதிவிலிருந்து சில பத்திகள்.
எனக்கு ஒருகாலத்தில் மரணம் என்றால் பயமாகத் தான் இருந்தது. பக்கத்துவீட்டு ஆச்சி செத்தால் ஒரு கிழமைக்கு நான் வீட்டை விட்டு இரவில் வெளியே போகமாட்டன், பகலில் யாரும் ஆச்சியின் வீட்டைக் கடந்துபோவது என்றால் யாரும் உதவி செய்யவேண்டும். அவ்வளவு பயம் எனக்கு.
ஆனால் மரணங்கள் மலிந்த பூமியாக எங்கள் நாடு மாறிய பின்னர் மரணம் என்பது உதயன் பேப்பரில் வரும் ஒரு சாதாரண செய்தியாகவே மாறிவிட்டது. காரணம் மரணத்தைப் பார்த்து, கேட்டுச் சலித்துப்போனவர்கள் நாம்.
எங்கேயாவது தூரத்தில் ஷெல் விழுந்தாலோ, இல்லை குண்டுகள் வீசப்பட்டாலோ வீதியால் போகிற வருபவர்களை "எங்கேயாம்?" எனக் கேட்டால் அவர் "அது பருத்தித்துறையில் 12 ஆம்" என்பார். இங்கே 12 என்பது இழந்த உயிர்களின் எண்ணிக்கை, இன்னொருவர் கொஞ்சம் விளக்கமாக "அது நெல்லியடியில் 20 அதில் 5 குழந்தைகள் " என்பார், இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது.
கலியாண வீடுகள் மரண வீடுகளான நிகழ்வுகள் கூட எங்கள் மண்ணில் நிகழ்ந்தன. ஒரு முறை காலை ஒரு மரண வீட்டில் நின்றுவிட்டு பின்னேரம் கலியாண வீட்டில் நின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.
நேற்றிருந்தவர் இன்றிருக்க மாட்டார், இன்றிருப்பவர் நாளை இருக்கமாட்டார், இதுதான் விதி. ஒரு சின்ன சந்தேகம் இந்த விதி விதி என்கின்றோமே அது கடவுள் போன்றதா? இல்லை வேறு ஏதும் வடிவிலானதா?. மரணம் எந்த நேரமும் வரலாம், எப்படியும் வரலாம்.
சதா எந்த நேரமும் ஒருவன் மரணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனின் வாழ்க்கை அவ்வளவுதான். அதே நேரம் மரணம் வருகின்ற நேரம் வரட்டும் அதுவரை நாம் நம்ம பாட்டிலை இருப்போம் என அதனைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தால் அவன் சாதாரண மனிதன்.
இந்தவிதமான ஆசைகளையும் வைத்திருக்காமல், எதிலும் பற்று வைக்காமல் மரணத்தைக் கண்டு பயப்படாமல், எவன் மரணத்தை இலகுவாக ஏற்றுக்கொள்கின்றானோ அவன் ஞானி.
விவேகானந்தர், நபிகள் நாயகம், இயேசு நாதர், புத்த பிரான் என சமய வழிகாட்டிகள் மரணத்தை வென்றவர்கள். ஏனென்றால் அவர்கள் உலக லவ்கீக வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் மூலம் மரணத்தை வென்று இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள்.
உடனே உங்களுக்கு மரணத்தை வெல்லவேண்டுமென்றால் துறவியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம், நிச்சயமாக துறவியாகித்தான் நீங்கள் மரணத்தை வெல்லவேண்டும் என்றில்லை. உங்கள் நாளாந்த வாழ்க்கையிலையே மரணம் பற்றிய பிரக்ஞ்சை இன்றி அதுவரும்போது ஏற்றுக்கொள்ளுவோம் என என்றைக்கு எண்ணுகின்றீர்களோ அன்றைக்கு நீங்கள் மரணத்தை வென்றவர்கள்.
தனக்கு சில நிமிடங்களில் மரணம் வரும் எனத் தெரிந்தும், "நான் திரும்பி வரும்போது எனக்கு கொக்கா கோலா வாங்கி வையுங்கோடா" எனக் கூறிச் சென்ற என்னுடைய பாடசாலை மாணவனையும் இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.
முன்னாள் யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர். துரைராஜா அவர்களின் மரணம் தான் நான் பார்த்த மரண ஊர்வலங்களிலே, இதுதான் மக்கள் கூட்டம் அதிகமான ஊர்வலம் என நினைக்கின்றேன். வதிரி ஆலங்கட்டை மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்யதார்கள், அவரது சிதைக்கருகில் இன்னொரு சாமான்யனின் உடல் தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. என்னருகில் நின்ற என் நண்பன் "பாரடா புரபெசருக்கும், யாரோ ஒரு இனம் தெரியாத சாமான்யனுக்கும் ஒரு இடம் தான், வாழ்க்கையில் நாம் கடைசியாக வரும் இடம் இதுதான்" என்றான். அப்போது தான் எனக்கு இதுதான் சுடலை ஞானம் என்பார்கள் என்ற எண்ணம் வந்திருச்சு. சிலருக்கு சுடலைக்குப் போகும் வரை இந்த சுடலை ஞானம் வராது, சிலருக்கு முன்னரே வந்துவிடும்.
என் நண்பன் இன்றைக்கும் மரணம், விதி, ஆசை என எதிலும் பற்றில்லாமல் இருக்கின்றான் ஆனால் அவன் துறவியல்ல.
இங்கே மரணத்தில் இருந்து மனிதர்களைப் பிரிப்பது, அவர்களின் ஆசையாகும். ஒருவனுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துகொண்டே இருக்கும்.
ஒருவன் குழந்தையாக இருக்கும் போது மரணம் பற்றிய எந்த பிரச்சனையும் இருக்காது, வாலிபனாக மாறிய பின்னர், எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வாழ்வதால் அந்த நேரத்தில் மரணத்தைச் சந்திக்க கலங்குவான். திருமணம் ஆனபின்னர் தன் குழந்தைகள் வாழ்க்கைக்காக மீண்டும் மரணத்தைச் சந்திக்க தயங்குவான், பின்னர் அந்தக் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் திருமணம் செய்து, தன் பேரப்பிள்ளைகளின் நன்மைகளைப் பார்க்கும் வரை தான் இறக்ககூடாது என எண்ணுவார், இப்படி எண்ணி எண்ணி அவர் தன் 90 வயதுகளில் இறக்கும் வரை அவரின் ஆசை அழியாமல் தான் இருந்தது.
அதே நேரம் நமக்கு வேண்டியவர்களின் மரணம் நம்மை கதிகலங்க வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம் போன்றவற்றுடன் ஏனைய சின்னச் சின்ன காரணங்களும். உதாரணமாக ஒருவர் நன்றாக நண்டுக் கறி சமைப்பார் அவரது கறி அவரது உறவினர்களுக்குப் பிடிக்கும், அவர் இறந்தபின்னர் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் பலரின் மனதில் இருக்கும்.
சிலவேளைகளில் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வருவார் அல்லது வரமாலும் இருக்கலாம். சில விடயங்கள் வாழ்க்கையில் வந்துபோகும் அவற்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாது, எந்த நேரமும் ஒரு விரக்தி நிலையே இருக்கும். இது மனநோயைக் கூட உண்டாக்கலாம்.
இப்படியான சிந்தனைகளில் இருந்து விடுபடத்தான் பொழுதுபோக்குகள் உருவாகின, ஒருவன் தன் மனதை தேவையற்ற விடயங்களில் அலைபாயவிட்டால் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வருவது வரட்டும் இன்றைய நாளை நாம் சிறப்பாக வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை என்றைக்கும் ஒளிவீசும்.
ஆச்சியினதும் என் நண்பனின் தந்தையினதும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
17 hours ago