நேற்றைய ஞாயிற்றுகிழமையை வழக்கம் போல் நித்திரைகொண்டு கழிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. வில்லு மதிய நேர காட்சிக்கு செல்லவேண்டும். கொன்கோர்ட் திரையரங்குக்கு 12.30 மணிக்கு வரவும். ஏற்கனவே பதிவுலக நண்பர்களின் வில்லு விமர்சனத்தைப் படித்து அதிர்ச்சி அடைந்திருந்தேன். சொந்த செலவில் சூனியம் வைக்கவும் வேண்டுமா என எண்ணி நண்பனிடம் வில்லு வேண்டாம் ஹிந்தி கஜனிக்கு போவோம் நம்ம அசின்( நண்பனும் அசின் ரசிகன்)கலக்குகிறாராம் எனச் சொல்ல கஜனிக்கு டிக்கெட் எடுப்பது கடினம், வில்லுத் தான் பார்க்கவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றான். அத்துடன் இன்னொரு நாட்டிலிருந்து மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் வில்லு நல்ல படம் நிச்சயம் பார்க்கவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். சரி நடப்பது நடக்கட்டும் எதற்க்கும் ரிஸ்க் எடுப்போம் என்று வில்லுக்கு போக முடிவு செய்துவிட்டேன்.
சரியாக திரையரங்கு 12.30 மணிக்கே சென்றுவிட்டேன் ஆனால் நண்பனைக் காணவில்லை. சனக்கூட்டத்தைப் பார்க்க பயமாக இருந்தது. அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் டிக்கெட் கிடைக்காது என்றபடியால் நான் போய் வரிசையில் நின்றேன். சிறிது நேரத்தில் முதல் காட்சி முடிந்தவர்கள் வைத்தியசாலையில் இருந்து வருபவர்கள் போல் முகத்தைச் சோகத்துடன் வைத்துக்கொண்டு வரும்போதே நம்ம டாக்டர் விஜய் நன்றாக அறுவைச் சிகிச்சை செய்து அனுப்பியிருக்கிறார் எனப் புரிந்துவிட்டது. அத்துடன் வரிசையில் நின்றவர்களைப் அவர்கள் பார்த்த பார்வை கோவில் வேள்விக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைப் பார்க்கும் பரிதாபப் பார்வையாக இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது நண்பன் இல்லை மயூரேசனுக்கு ஏற்பட்டதுபோல் இல்லாமல் பார்க்கூடிய தோரணையில் சிலர் இருந்தபடியால் ஏதோ பொழுது போனது.
டிக்கெட் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். நண்பனைக் காணவில்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது 10 நிமிடத்தில் வருவேன் மொத்தமாக 4 டிக்கெட் எடு என்றான். நாலா? வேறை யார் வருகிறார்கள் எனக்கேட்க நீ எடு வந்துசொல்கின்றேன் என்றான். சரி என்று நானும் டிக்கெட் எடுத்து சிறிது நேரம் காத்திருக்க ஒரு ஓட்டோவில் இரண்டு பெண்களுடன் வந்து இறங்குகின்றான். அடப்பாவி இதற்காகவே என்னையும் பலிக்கடா ஆக்கினான். ஒரு பெண் அவனது மச்சாள் இன்னொரு பெண் மச்சாளின் நண்பி என்று அறிமுகம் செய்தான். நேரம் போய்விட்டது படம் போடப்போகின்றார்கள் வா என அவனை இழுக்காத குறையாக மேலே ஏத்திக்கொண்டுபோய்விட்டேன். அங்கே போனால் நாலே நாலே சீட் மட்டும் இருக்கின்றது. ஏனைய அனைத்தும் நிரம்பிவிட்டது. தியேட்டர் பையன் ஒருவர் டோர்ச் லைட் அடித்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் இருத்திவிட்டார். நான் முன் வரிசை நண்பன் மூன்றாவது வரிசை அவந்து மச்சாள் கடைசிக்கு முதல் வரிசை அவரது நண்பி கடைசி வரிசை.
பெரும் விசில் சத்ததுடன் படம் ஆரம்பமாகியது. முதலில் காணமல் போயிருந்த தாமு உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என பேட்டி எடுக்கின்றார். சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பின்னர் எம்ஜீஆர் என பலரும் சொல்லுகிறார்கள் ஒரு கிழவி மட்டும் இவர்களை விட இன்னொருவரும் இருக்கின்றார் என் பேர்த்தியை காப்பற்றியவர் அவர் எனச் சொல்ல நம்ம இளையதளபதி புடைவைகளுக்கிடையே தோன்றி அடியாட்களை அடித்து நொருக்குகின்றார். எனக்குப் பக்கத்தில் இருந்த சிறுமி ஒருத்தி இந்தச் சண்டைக் காட்சிக்கு விழுந்து விழுந்து சிரித்தார். குழந்தைகள் பொய் சொல்வதில்லை.
அடுத்தது வழக்கம் போல் நாயகன் அறிமுகப்பாடல். ராமரிடம் வில்லையும் பீமனிடம் கதையையும் கேட்ட விஜய் இயக்குனரிடம் படத்தின் "கதை"யையும் கேட்டிருக்கலாம். மானாட மயிலாட புகழ் குஷ்பு இடையிடையே திரையை ஆக்கிரமித்து குத்தோ குத்து என்று குத்தினார். அவரின் ஆட்டத்தில் எனர்ஜி இருந்தது ஆனால் கிரேஸ் இருக்கவில்லை. 8 மார்க் தான் போடலாம். ரம்பா 10 போட்டிருப்பார்.
அடுத்து வடிவேல் அறிமுகமாகின்றார் பரவாயில்லை சிரிக்கவைக்கின்றார். ஆனாலும் எத்தனை நாளைக்குத்தான் வாயைக் குவித்து அழப்போகின்றாரோ தெரியவில்லை. நாயகி வழக்கம் போல் கிராமத்தில் நவநாகரீகப் பெண்மணியாக அறிமுகமாகின்றார். பிறகென்ன வழக்கமான பார்முலாக் கதைதான். அதிலும் அந்தக் காலத்தில் அரதப்பழசான கதை. ஏற்கனவே பலர் அலசி துவைத்து அடித்துக் காயப்போட்ட விமர்சனத்தை நானும் செய்யவிரும்பவில்லை.
ஏனைய விஜய் படங்களில் இல்லாத சிறப்புகள் சில இந்தப் படத்தில் கண்ணில் பட்டது.
1. நாயகன் பஞ்ச் டயலாக் பேசவில்லை.
2. தெலுங்கிலோ அல்லது இன்னொரு தென்னிந்திய மொழியிலோ வில்லன்கள் இல்லை நாயகனும் அந்த மொழி பேசவில்லை.
3. வடிவேலுவுடன் சிங்கமுத்து குழு வந்து இம்சை செய்யவில்லை.
4. கிளைமாக்ஸ் காட்சியில் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை.
இப்படிச் சில காட்சிகள் இருந்தாலும் சில கேள்விகள் மனதில் எழுகின்றன.
1. இந்தப் படத்தில் விஜயின் பெயர் புகழ். வில்லு என்பதற்க்கும் இந்தப் பெயருக்கும் என்ன சம்பந்தம். படத்திற்க்கு அம்பு என்று வைத்திருந்தாலாவது விஜய் அம்பாகி கொலை செய்கின்றார் என அர்த்தப் படுத்தியிருக்கலாம் வில்லுக்கு விளக்கம் கொடுப்பவரை தமிழ்மண விருதுக்கு பரிந்துரை செய்யலாம்.
2. எத்தனையோ கோடிகள் கொட்டி படம் எடுப்பவர்கள் ஏன் கதாநாயகிக்கு மட்டும் நூற்றுக்கணக்கில் செலவு செய்து ஆடை கொடுக்கின்றார்கள். பலரும் நயன் இந்தப் படத்தில் அதிக ஆடை குறைப்பு செய்திருக்கின்றார் என்கின்றார்கள் ஆனால் பில்லாவை விட இதில் அதிகம் ஆடை குறைக்கவில்லை என நினைக்கின்றேன்.
3. முதல் காட்சியில் ரஜனி கமல் எம்ஜீஆரை மக்களின் ஹீரோவாக காட்டிய விஜய ஏன் தன் போட்டியாளர் அஜித்தைக் காட்டவில்லை. ரஜனிப் படங்களில் ரஜனி கமலை நிச்சயம் காட்டுவார். சிவாஜியில் பெயர் அன்ட் லவ்லி பூசி தான் கமலஹாசனைப்போல் அழகாக வருவேன் என வசனம் கூட வைத்திருப்பார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் இப்படிச் செய்யலாமா?
4. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் வெளிநாட்டுக்குச் செல்ல விசா கிடைப்பதுபோல் எப்படி காமடியனுக்கும் கிடைக்கின்றது.(படப்பிடிப்புக்கு அல்ல கதையில்).
5. காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக படங்கள் போல் இளைய தளபதி இனி எப்போது நடிப்பார்.
எனக்கு இன்னொரு விதி வலியது கதையும் இருக்கின்றது. இன்னொரு நாட்டில் சிலம்பாட்டம் பார்த்த கதை இன்னொரு நாள் எழுதுகின்றேன்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago