திமுக கூட்டணியில் வீரத்தளபதி ஜே.கே.ரீத்திஷ்

திமுக சார்பில் வீரத் தளபதி ஜேகேரித்திஷ், கயல்விழி அழகிரி மற்றும் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகனான பிரபாகரன், நடிகர் ரஜினியின் டாக்டர் நண்பர் பாரதிமோகன், அமைச்சர் பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் இப்போதைக்கு புதுமுக பட்டியல் என்ற யூக லிஸ்ட்டில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம் : ஜூனியர் விகடன்.

ரீமிக்ஸ் இசையமைப்பது எப்படி?

கடந்த சில ஆண்டுகளாக மீழ்கலவை இசை எனப்படும் ரீமிக்ஸ் கலாச்சாரம் திரைப்படங்களிலும் ஏனையவர்களிடமும் அதிகமாக வேரூண்டிவிட்டது. கணணி இயக்கத் தெரிந்த நண்டு சிண்டுகள் கூட ரீமிக்ஸ் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இசையமைப்பாளர்களோ பழைய பாடல்களைக் கெடுப்பதற்காக மீண்டும் அந்தப் பாடலின் கற்பை அழிக்கின்றார்கள்.

பெரும்பாலான ரீமிக்ஸ் பாடல்கள் அந்தகால அல்லது இடைக்கால ஹிட்டான பாடலை அழிப்பதையே நோக்கமாககொண்டிருக்கின்றது. அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மன்மதன் படத்தில் இடம் பெற்ற‌" என்னை ஆசை மைதிலியே" பாடல் ரீமிக்ஸ் இல்லை அச்சு அசல் என்றே சொன்னான். தான் பிடித்த முயலுக்கு காலே இல்லாதவர்களிடம் நான் விவாதிப்பதில்லை அப்படியே விட்டுவிட்டேன்.

ரீமிக்ஸ் செய்வது எப்படி. இதொன்றும் பெரிய விடயம் இல்லையென்று பழைய பாடல்களைக் கெடுக்கின்ற நண்பனும் சொன்னான். ஏதோ சில மென்பொருள்கள் இருந்தால் சரி அதனை விட பழைய அசல் பாடலும் வேண்டும் என்றான்.

என் பார்வையில் ரீமிக்ஸ் இசைய‌மைப்பவர்கள் ஒருவிதமான டெம்லேட் பாவிக்கின்றார்கள். அந்த டெம்லேட் செய்முறை விளக்கம் கீழே:

1. முதலில் ரீமிக்ஸ் செய்யவேண்டுய ஒரிஜினல் பாடலை தேர்ந்தெடுங்கள். எதற்க்கும் ஆறு அல்லது ஏழு தடவை திரும்ப திரும்ப கேளுங்கள்.

2. பாடல் ஆரம்பிக்க முன்னர் வேறு ஏதாவது ஒரு பாடலின் முதல் இசையை அல்லது அதேபாடலின் இசையை சற்றே மாற்றி பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் இஅய்ங்கவிடுங்கள்.

3. பின்னர் ஒரிஜினல் பாடலின் சரணத்தை இதேபோல் பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் பாடவிடுங்கள் அல்லது வித்தியாசம் தெரியாமல் இருக்க அதே பாடலுக்கு பின்னணியில் வேறு இசைக்கருவிகளை இசைக்க விடுங்கள்.
உதாரணம் "ஆசை நூறுவகை" பாடல் கொஞ்சம் பாஸ்மோட், "காதல் வைபோகமே" அதே பாடல் பின்னணி இசை கர்ணகடூரம்.

4. பல்லவி முடிந்தபின்ன வரும் முதல் சரணத்தின் இடையில் வரும் முதல் பிஜிஎம்முக்கு வேறு ஏதாவது பாடலின் பிஜிஎம் அல்லது ராப் பாடுவதுபோல் ஏதாவது ஆங்கிலம் அல்லது வேறுமொழி வரிகளை கொஞ்சம் முக்கிமுனகிக் கொண்டு அல்லது காட்டுக்கத்தலாக இசைக்கவும்.
உதாரணம் :பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" பாடல் வேறு பிஜிஎம் ரகம் பிரேம்ஜி அமரன் இசையமைத்த ஒரு படத்தில் பாடலுக்கு "இளமை இதோ இதோ" பாடலின் பிஜிஎம் அப்படியே சுட்டுப்போட்டிருப்பார்.

5. குறிப்பு நாலில் உள்ளதுபோல் இரண்டாவது சரணத்தின் பிஜிஎம்முக்கும் செய்யவும்.

6. இறுதியாக பாடல் முடிந்தபின்னர் கூல், கமோன், ஸ்வீட்டி என ஏதாவது வசனம் சேர்த்து முடிக்கவும் பாடல் தயார்.

பின்னர் சேர்க்கவேண்டிய இசையையையும் பாடகரையும் தயார் செய்த்து நல்லதொரு ரீமிக்ஸ்சை ரசிக மஹா ஜனங்களுக்கு பரிமாறவும்.

ஒரு சில நல்ல ரீமிக்ஸ் பாடல்களும் வந்துள்ளன. ரகுமான் தொட்டால் பூமலரிலும் பாடலில் கலக்கி பொன்மகள் வந்தாலில் சொதப்பியிருப்பார்.

யாவரும் பயம் ‍- விமர்சனம்

வலையுலகப் பதிவுகள் மூலம் படத்தைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டாலும் முதன்முறை பேய்ப்படம் தியேட்டரில் தனியாகப் பார்க்கபோனது இந்தப் படத்திற்க்குத் தான். ஏற்கனவே தீ படம் பார்த்து நொந்த மனதை இப்படியான படங்கள் பார்ப்பதன் மூலம் கொஞ்சம் ஆற்றிக்கொள்ளமுடியும்.

முதல்காட்சியிலிருந்தே ஏற்படும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இடைவேளையில் பாப்கோர்ன் வாங்கவதையோ ஐஸ்கிறீம் வாங்குவதையோ மறக்கவைக்கின்றது. பின்னர் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் டல் அடித்தாலும் கிளைமாக்ஸ்சில் சீட் நுனிக்கு வரவைக்கின்றது. இயக்குனருக்குப் பாராட்டுகள்.

படத்தின் கதையைச் சொல்லவிரும்பவில்லை. ஒரு திகில் படம் அவ்வளவுதான். சுஜாதாவின் நாவல் ஒன்றை வாசித்த உணர்வு இந்தப் படம் பார்க்கும்போது வரும். அதிலும் சமையல் குறிப்பு புத்தகம் ஒன்றை மனைவிக்கு மாதவன் பரிசளித்து நடத்தும் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இதுவரை எத்தனை கணவர்மார் தங்கள் மனைவிக்கு இந்தப் புத்தகத்தை பரிசளித்தார்களோ தெரியாது. சர்வேசன் ஒரு சர்வே எடுக்கவும்.

புதுமுக இயக்குனர் விக்ரம் குமார் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கின்றார். வில்லன் யார் என்பதிலிருந்து ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் சஸ்பென்ஸாக இருக்கின்றது. யாரும் எதிர்பாராத திருப்பம் என்றாலும் ராஜேஸ்குமார், சுஜாதா , சிட்னிஷெல்டன் போன்றவர்களின் மர்ம நாவல்கள் படித்தவர்களுக்கு ஓரளவுக்கு முடிவையும் கொலையாளியையும் ஊகிக்கமுடிந்திருக்கும்

பிசி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தி பிளாஷ்பேக் காட்சிகளில் இன்னொரு நிறம் என இவரது காமேரா நிறம் மாறுகின்றது. அதிலும் அடிக்கடி லிப்டை காட்டுகின்ற கோணங்கள் அசத்தல்.

படத்திற்க்கு பாடல்கள் தேவையில்லை ஆனாலும் முதல் பாதியில் அரைகுறையாக இரண்டுபாடல்கள். இசை சங்கர் எஸான் லாய் பெரிதாக பாடல்கள் கேட்கவில்லை. பின்னணி இசை இன்னொருவரின் பெயர் போடுகின்றார்கள். அவர் பின்னணீ இசையில் அதகளப்படுத்தியிருக்கின்றார் சிலவேளைகளில் கொஞ்சம் ஓவராகவும் இருக்கின்றது. சில இடங்களில் சைலண்டாக விட்டிருந்தால் நிச்சயம் பார்வையாளர்களின் இதயத் துடிப்புக்கேட்டிருக்கும். ஆனால் இந்த இடங்களில் இவர் ட்ரம்ஸ்சை அலறவிட்டுவிட்டார். படம் முடிந்த பின்னர் மாதவனுக்கு ஒரு ஐட்டம் பாடல்.

மொத்தத்தில் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வந்திருக்கும் ஒரு திகில் கலந்த மர்மப் படம்.இறுதியாக வந்த படம் விசில் என நினைக்கின்றேன் நாகாக் கதைகள். அந்த நாள் படம் அண்மையில் கேடிவியில் பார்த்தேன். அமரர் ஸ்ரீதர் கலக்கியிருப்பார். அதனைப்போல் படம் பார்த்தவர்கள் முடிவை மற்றவர்களுக்குச் சொல்லகூடாது.

மாதவன், சரண்யா மற்றும் பிளாஷ்பேக்கில் தோன்றும் சில சீரியல் நடிகர் நடிகைகளைத் தவிர்த்து ஏனையோர் புதுமுகங்கள். கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு ஒத்துவராது. புதுமுகங்களுக்குப் பதிலாக பழைய தெரிந்தவர்களை நடிக்கவைத்திருக்கலாம்.

சில லாஜிக் அத்துமீறல்கள்:
1. மாதவனின் தாயார் ஒரு காட்சியில் முதல் நாள் பார்க்காத சீரியலைப் பற்றி இன்னொருவரிடம் போனில் கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால் தங்கள் வீட்டில் மட்டும் ஒளிபரப்பாகின்ற சீரியலைப் பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை.
2. மாதவனுக்கு மட்டும் வேலை செய்யாத லிப்ட் பற்றி மாதவன் தவிர ஏனையோர் கவலையே படவில்லை.
3. எல்லாப் திகில் ப்டங்களில் இருப்பதுபோல் கண் தெரியாத ஒருவர். அவர் பின்னர் எங்கே போனார் எனத் தெரியவில்லை.

இப்படிச் சில இடங்களில் லாஜிக் அடிபட்டாலும் குருவி, வில்லு,ஏகன் , தீ போன்ற படங்களைப் பார்த்து ரசித்த நம்ம ரசிகர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு நிச்சயம் தெரியாது. என்ன மீண்டும் மீண்டும் பார்க்கமுடியாது ஆகவே ரிப்பீட் ஓடியன்ஸ் இந்தப் படத்திற்க்கு அவ்வளவு இருக்காது.

அதுசரி நண்பர்களே உண்மையில் பேய் இருக்கா இல்லையா? லோஷன் கூட பேய் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்தப் படமும் பேய்ப்படம் ஆனாலும் மருந்துக்கும் ஒரு வெள்ளை உருவம், புகை ஆவி எனப் பயமுறுத்தவில்லை. இதற்கான விடையை ஏனோ இயக்குனர் சொல்லவில்லை. அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியில் எப்படி இவர்களுக்கு மட்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகின்றது என்பதையும் அவர் ஏனோ சொல்லவில்லை.அட்லீஸ்ட் தசாவதாரம் கமல் போல் பேய் இல்லை இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இப்படி இவர் ஒன்றும் சொல்லாதது என்னைப்போன்ற சிறுவர்களை இரவில் நித்திரை கொள்ளமுடியாமல் செய்துவிடும். பாருங்கள் யாவரும் நலம் என டைப் செய்ய நினைத்து பயத்தில் யாவரும் பயம் என டைப் செய்துவிட்டேன்.

பயப்படாமல் பார்க்ககூடிய பயம் கலந்த படம்.

Flash News : இலங்கைக் கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பஸ் மீது இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரர்களுக்கு பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் 5 பேர் கொல்லப்பட்டார்கள். இலங்கை வீரர்கள் சிலருக்கு காயம்.

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்திய அணி செல்ல மறுத்த தொடருக்கு இல்ங்கை அணியினர் சென்றார்கள் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.

இனிமேல் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டம் நடப்பது கஸ்டம்தான். சில வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்து அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகில் குண்டு வெடித்து அந்த அணியினர் இடையில் தொடரை நிறுத்திவிட்டுச் சென்றார்கள்.

தீ இன்னொரு மசாலா


நேற்று சன் பிக்சர்சினால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தீ வெளியானது. ட்ரைலரிலேயே சுந்தர்.சியை வாய்ஸ் சித்தார்த் கெட்டப்போல் நிர்வாணமாக காட்டியும் வழக்கறிஞர் ஒருவரை போலீஸ்காரரான சுந்தர்.சி மிரட்டுவதுபோலவவும் காட்டினார்கள். (இன்றிலிருந்து அந்த காட்சிகள் காட்டப்படவில்லை).

நீண்ட நாட்கள் திரையில் படம்பார்க்கவில்லை என்பதனால் இன்றைக்கு காலைக்காட்சிக்கு போனால் தியேட்டரில் கூட்டத்தையே காணவில்லை. போகும் வழியில் நான் கடவுள் திரையிடப்பட்ட தியேட்டரில் ஓரளவு சனம் நின்றது.

படத்தின் டைட்டிலில் தான் நமீதாவும் இன்னொரு மலேசியப் புதுமுகமும் நடிப்பதையே அறிந்துகொண்டேன். வடிவேல், விவேக் இருவரும் இல்லை என்றவுடனேயே சப்பென்று ஆகிவிட்டது. வையாபுரி வில்லனின் அல்லக்கையாக வருகின்றார் சிரிக்கவைக்கவில்லை. முதல்காட்சியே சுந்தர்.சியின் நிர்வாணம் தான். படத்தின் கதையைச்(?) சொல்லவிரும்பவில்லை.

முதல்பாதி சத்யராஜின் மகாநடிகன், அமைதிப்படை படங்களை அப்படியே காப்பி பண்ணியது. இயக்குனர் கிச்சா சத்யராஜ் ரசிகரோ தெரியவில்லை நன்றாக காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றார்.

நீதிமன்றக் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் நடித்த ஒருபடம் போல் சாட்சி சொல்பவர் ஊமை என எதிர்க்கட்சி வக்கீல் வாதம் செய்கின்றார். இந்தப்படத்திலும் வில்லன் சத்யராஜ் என நினைக்கின்றேன். படம் ஞாபகம் வரவில்லை.

சுந்தர்.சி ஆக்சனில் இறங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படம் எடுத்திருக்கின்றார்கள். ஆனாலும் அவருக்கு ஆக்சன் ஒத்துவரவேயில்லை. சிலவேளைகளில் இந்தப்படத்தில் விக்ரம் அல்லது அர்ஜீன் நடித்திருந்தால் ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கலாம். சுந்தர்.சி போலீஸ்காரரான பின்னர் வேட்டையாடு விளையாடு ராகவன் பாடல் போல் ஒரு பாடல் எடுத்திருக்கின்றார்கள். இந்தப் படத்தின் நகைச்சுவைக்காட்சியே இதுதான். கானமயிலாட பழமொழி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.


நமீதா ரசிகர்களுக்கு கிளுகிளுப்பான விருந்தையே தந்திருக்கின்றார். நீச்சல்க் குளக் காட்சியில் நீச்சல் உடைக்கு மேல் ஏன் இன்னொரு உடைபோட்டுக்கொண்டு நீந்துகின்றார் என்பதுதான் தெரியவில்லை. ருச்சிதேவி என்ற நடிகையாக வந்துபோகின்றார் அல்லது முழுத்திரையையும் ஆக்கிரமிக்கின்றார்.

நமீதாவுடன் சுந்தர்.சி நடிக்கும் காட்சிகள் குஷ்வுவின் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்படியொரு கெமிஸ்ரி இருவருக்கிடையில் இந்தப் படத்தில். நமீதாவுக்காக இந்தமொக்கைப் படத்தைப் பார்க்கலாம் என வெளியில் வந்தவர்கள் காதுபடக் கூறினார்கள்.

இன்னொரு நடிகையான மலேசிய இறக்குமதி இரண்டுபாடல்களுக்கு ஆடுகின்றார் நாலு வரி வசனம் பேசுகின்றார், அவ்வளவுதான். நடிகைக்குரிய எந்தவொரு அறிகுறியும் அவரிடம் இல்லை. தமிழ் சினிமாவில் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

தளபதி தினேஷ் சண்டைக்காட்சிகளில் நன்றாக உழைத்திருக்கின்றார். டாக்டர் விஜயின் சண்டைகள் போல் புவியீர்ப்பு விசைக்கு எதிராக சண்டை இல்லாதது கொஞ்சம் ஆறுதல்.

இசை ஸ்ரீகாந்த் தேவா முதல் பாடலில் தந்தை பெயரைக் காப்பாற்றிவிட்டார், வேறை என்ன தேவாவின் கானாப்பாடல் சாயலில் வரிகளைமாற்றி ஒரு பாடல். ஏனைய பாடல்கள் கேட்கும்
ரகமாகவே இல்லை.

பல வசனங்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே இருக்கின்றன. இதயம் இனிக்கமுன்னர் தயாரித்த படம்போல இருக்கின்றது. இறுதிக்காட்சியில் சுந்தர்.சி வசனம் பேசியே கொல்கின்றார். தலைவாசல் விஜயும் தானும் வசனம் பேசிவதில் சளைத்தவர் இல்லை என்பதுபோல் அதிகமாகவே நடிக்கின்றார். கெட்டவார்த்தைகள் சகஜமாக வந்துபோகின்றன.

சூப்பர் ஸ்டாரின் கலக்கல் படமான தீயின் பெயரைவைத்தது ஏனோ தெரியவில்லை. படத்திற்க்கு தீ என்ற பெயரைவிட இரத்தம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் அவ்வளவு இரத்தக்களரி. கமலின் சண்டியர் பெயருக்கு அரிவாள் இரத்தம் வன்முறை என கூச்சலிட்டவர்கள் இப்படையான வன்முறை நிறைந்த படங்கள் கண்களுக்குத் தெரியாது.

சன் பிக்சர் மொக்கைப்படம் எடுப்பது என்றே சபதம் செய்திருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. வரும்வாரங்களில் இவர்களின் டாப் டென்னில் தீ முதல் இடம் பிடிப்பது என்னவோ உண்மைதான்.

படிக்காதவன், தெனாவட்டு, வில்லுப் படங்களை விட தீ ஓரளவு பரவாயில்லை.

தீ புகைமட்டும்.  


நமீதா பட உதவி விகடன்.கொம்

வலைமாமணி விருதுகளும் வாழ்த்துக்களும்

இந்த வாரம் ஏதோ விருதுகள் வாரம் போல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தமிழன் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றார். பின்னர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்மணத்தின் சிறந்த பதிவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். 

நான் வாக்களித்த ப‌லருக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. சிலர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்கள். 

இந்தப்போட்டியில் நானும் என் இரண்டு ஆக்கங்களை அனுப்பியிருந்தேன். பெரும்பாலான என் ஆக்கங்கள் மொக்கையாகவே இருக்கும். அப்படியிருந்தும் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக்கி அழகுபார்த்த வேளையில் ஒரு சில நல்ல பதிவுகள் எழுதியிருக்கின்றேன் என நண்பர்கள் கூறினார்கள். என் ஆக்கங்கள் இரண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்தபடியால் என் தன்னம்பிக்கை இன்னும்கொஞ்சம் வளர்ந்துள்ளது. என்னுடன் போட்டியிட்டவர்கள் பெரியதலைகள் அதில் சிலர் பதிவுலகில் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். ஆதலால் இந்தப்போட்டியில் நானும் இருந்தேன் என்பதே மகிழ்ச்சிதான். காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)என்ற பிரிவில் நான் எழுதிய தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)

  1. எனது முதல் குறும்படம் இதோ

  2. என் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா…

  3. பெங்களூரூ மலர் கண்காட்சி - படங்கள்

  4. எம்மதமும் எமக்கு…[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]

  5. தசாவதாரம் - முதல் சண்டைக்காட்சி குறித்து

  6. குட்டிப் புகைப் படங்கள் சில

  7. ‘ஆக்ஸிடெண்ட்”

  8. தமிழ் சினிமா - 2005

  9. யார் வரைந்ததைப் பார்த்து???

  10. தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

  11. பிரிட்டிஸ் காலத்து இலங்கை(CEYLON) இப்படி இருந்ததாம்-வீடியோ

  12. பென்சில் ஓவியம் - 3

இன்னொரு பிரிவான பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பகுதியில் எனது நட்சத்திரவாரப் பதிவான "வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும்" ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது.

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

  1. * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க

  2. என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்

  3. உன்னை கரம் பிடித்தேன்… வாழ்க்கை ஒளிமயமானதடீ!!!!

  4. ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6

  5. சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே…

  6. மலரும் தீபத் திருநாள் நினைவுகள்

  7. எத்தனை விதங்களில் மனிதர்கள்!

  8. இரயிலோடு விளையாடி

  9. *** வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும். ***

  10. என் அப்பா சொல்லித் தந்த சினிமா

  11. ஊரும் வாழ்வும்……..

  12. பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!

  13. தங்கமணியைப் பற்றி ஒரு பதிவு

  14. காசி பயணத்தொடர்(2) - கங்கா ஆரத்தி


எனக்கு வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த நேரத்தில் என்னை வலையுலகிற்க்கு இழுத்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

சுஜாதா இன்றிருந்தால்....



எழுத்தாளர் சுஜாதா மறைந்து நாளையுடன் ஓராண்டு ஆகின்றது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது. அவரது இழப்பு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பேரிழுப்பு என்பதை யாரும் மறக்கமுடியாது. இறந்தபின்னரும் அவரது எழுத்துக்கள் இன்னமும் வெகுஜன இதழ்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இனியும் வரும்..

இந்த ஓராண்டுடிற்க்குள் உலகில் எத்தனை மாற்றங்கள். என்னைப்போன்ற சோம்பேறி( தேடிப்பிடித்து வாசிப்பது என்பது சில காலமாக குறைந்துவிட்டது) வாசகர்களுக்கு கற்றதும் பெற்றதும் மூலமாக அந்த நாட்களில் உலகத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஓரளவு சுருக்கமாக விளங்கப்படுத்தியவர் அமரர் சுஜாதா.

சுஜாதா இன்றிருந்தால் எவற்றைப் பற்றியெல்லாம் விகடன் கற்றதும் பெற்றதில் எழுதியிருப்பார்.

1. ஓபாமாவும் உலகப் பொருளாதாரமும்
தன் இயல்பான நடையில் பொருளாதார அடிப்படை அறிவில்லாதவனும் விளங்கக்கூடியவாறு உலக பொருளாதரத்தின் வீழ்ச்சியையும் ஓபாமாவின் எழுச்சியையும் அமெரிக்க கணணி வல்லுனர்களின் பிரச்சனைகளையும் எழுதியிருப்பார்.

2. சிலம்டோக் மில்லியனர்
அண்மையில் பரபரப்பான விடயமாக இருக்கின்ற இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு கோணத்தில் ஜோசித்திருப்பார்.

3. தசாவதாரம்
சுஜாதாவின் மறைவின் பின்னர் வெளியான கமலின் பிரமாண்ட தயாரிப்பு. கதைவிவாதத்தில் சுஜாதா பங்குபற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும், படத்தில் சில காட்சிகளில் கூட சுஜாதாவின் பாதிப்புகள் இருந்தன. வசனம் கமல் எழுதியதாக இருந்தாலும் சில இடங்கள் சுஜாதா டச்.

4. சுப்பிரமணியபுரம்
ஒவ்வொரு வருட இறுதியிலும் இவர் கற்றதும் பெற்றதிலும் கொடுக்கின்ற விருது பட்டியலில் சுப்பிரமணியபுரம் முதல் இடத்தைப் பிடித்திருக்கும்.

5. இந்தியக் கிரிக்கெட் அணியின் எழுச்சி
டோணியின் தலைமைத்துவத்தின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற பெற்றிகள் பற்றியும் ஐபில் போட்டிகள் பற்றியும் நிறையவே எழுதியிருப்பார்.

6. ஆஸ்கார், ரகுமான்
ரகுமானின் இசை பற்றியும், ரகுமானுடன் தன் அனுபவங்கள் பற்றியும் சிலம்டோக் மில்லியனர் இசைக் குறிப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்திருப்பார்.

7. சந்திராயன்
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளினால் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன் பற்றிய சுவையான தகவல்கள் வழங்கியிருப்பார்.

8. வலைப்பதிவாளர்கள்.
இன்றையகாலத்தில் வலைப்பதிவாளர்களும் இலக்கியத்தில் ஒரு அங்கம் வகிப்பதனாலும் விகடன் தன் வரவேற்பறையில் வாரம் ஒரு வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதனாலும் நிச்சயம் வலைப்பதிவாளர்கள் பற்றிய குறிப்புகள் இடையிடயே எழுதியிருப்பார். அத்துடன் தன் விருதுப்பட்டியலில் சிறந்த வலைப்பதிவு ஒன்றையும் குறிப்பிட்டிருப்பார்.

9. நான் கடவுள்
நான் கடவுள் படத்தையும் அகோரிகள் பற்றிய விவரங்களையும் தன் பாணியில் தந்திருப்பார். அகோரிகள் பற்றி கருடபுராணம் போல ஏதாவது ஒரு புராணத்தில் இருப்பதாகவும் எழுதியிருப்பார்.

10. எந்திரன்
எந்திரன் படத்தைப் பற்றியதோ அல்லது கதைபற்றியோ மூச்சுவிடாமல் ஐஸ்வர்யா ராய் பற்றியும் சூப்பர் ஸ்டார், சங்கர் பற்றியும் சுவையான தகவல்கள் கிடைத்திருக்கும்.

சுஜாதா பெரும்பாலும் அரசியல் பற்றி எழுதுவதில்லை என்பதால் உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், வக்கீல்கள் போராட்டம், போன்ற சமூக சார்ந்த விடயங்களை தவிர்த்திருந்திருப்பார்.

சுஜாதா இன்று நம்முள் இல்லாவிட்டாலும் அவரின் பாத்திரங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தே இருக்கும். கணேஷ், வசந்தையும், அனிதாவின் காதலையும், கெட்டவார்த்தை பேசுகின்ற விக்ரத்தையும், ஜீனோ நாயையும், குருபிரசாத்தையும் தமிழ் வாசகர்கள் அவ்வளவு எழுதில் மறக்கமாட்டார்கள். குறிப்பாக அவரின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக் இன்னமும் பூர்த்தியாகவே இல்லை. வசந்த் இதுவரை அந்த ஜோக்கை சொல்லவேயில்லை.

அமரர் சுஜாதாவின் எழுத்துக்கள் உள்ளவரை அவரது புகழ் மங்காது.

கலைமாமணி ஐஸ்வர்யா தனுஷ்.



இன்றைக்கு வெளியான தமிழக அரசின் கலைமாமணி விருதுப்பட்டியலில் ஐஸ்வர்யா தனுஷின் பெயரைப் பார்த்தது அதிர்ச்சியாகிவிட்டேன். இவர் சாதாரண ஒரு குடும்பப்பெண்(ரஜனி மகள் என்பதைத் தவிர )இவருக்கு எந்த வகையில் விருது கொடுத்திருக்கின்றார்கள்.

விருது பெறும் ஏனையவர்கள்.

அபிராமி ராமநாதன் - திரைப்பட தயாரிப்பாளர்
சேரன் - திரைப்பட இயக்குனர்
சுந்தர்.சி - நடிகர்
பரத் - நடிகர்
நயன்தாரா - நடிகை
அசின் - நடிகை
மீரா ஜாஸ்மின் - நடிகை
பசுபதி - குணசித்திர நடிகர்
ஷோபனா - குணசித்திர நடிகை
வையாபுரி - நகைச்சுவை நடிகர்
சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை
வேதம்புதிது கண்ணன் - வசனகர்த்தா
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர்
பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குனர்
சித்ரா சுவாமிநாதன் - புகைப்பட கலைஞர்
நவீனன் - பத்திரிகையாளர்
சீனிவாசன் - ஓவிய கலைஞர்
சுந்தர்.கே.விஜயன் - சின்னத்திரை இயக்குனர்
திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குனர்
பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா
அபிஷேக் - சின்னத்திரை நடிகர்
அனுஹாசன் - சின்னத்திரை நடிகை
அமர சிகாமணி - சின்னத்திரை

என்ன கொடுமை இது?

Blog Widget by LinkWithin